சிநேக வீடு - Sneha Veedu 2011 Malayalam

பிரம்மரத்திற்கு அடுத்து நான் பார்த்து ரசித்த மோகன்லாலின் படம். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் இன்னொரு யதார்த்தமான மலையாளப் படம். அஜயன் (மோகன்லால்) பாலக்காட்டில் வாழ்ந்து வரும் ஒரு தனியன். அவரும் அவரது அம்மாவும் மட்டும் ஒரு வீட்டில் தனியே வசித்து வருகிறார்கள்.


2 ½ வயதில் அஜயனின் அப்பா இறந்துவிட , அம்மா அஜயனை கஷ்டப்பட்டு ஆளாக்குகிறாள். பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வசதியில்லாததால் இந்தியாவின் பல ஊர்களிலும் வேலை பார்த்துவிட்டு வயதான தன் அம்மாவுடன் அவள் அந்திம காலத்தை கழிக்கவேண்டி பாலக்காட்டில் ஒரு சிறிய பேக்டரியை விலைக்கு வாங்கி நடத்திவருகிறான்.  

தன் நட்பு மக்களுடன் இனிதே வாழ்கையை கடத்தி கொண்டிருக்கையில் , அவனது வாழ்வில் ஒரு பிரளயம் வெடிக்கிறது. திருமணமே ஆகாத அஜயனுக்கு அவனின் மகன் என்று உரிமை கொண்டாடிகொண்டு பதின்மவயதில் நிற்கின்ற ஒரு சிறுவன் வந்து சேர்கிறான். அஜயன் அச்சிறுவன் தன் மகனில்லை என்று சாதித்தாலும் அவனது அம்மா அச்சிறுவனிடத்தில் மிக பாசம் கொள்கிறாள். பல போரட்டாங்களுக்கு பிறகு அஜயன் அச்சிறுவனை தன் மகனென ஏற்கிறான். 

ஒரு சின்ன கதைதான். அதை எடுத்திருக்கும் விதம்தான் மிக அற்புதமாக இருக்கிறது. பார்கிறவரின் மனதில் பச்க்கென பசை போட்டி ஒட்டிக்கொள்கிற மாதிரியான காட்சியைமைப்புகள். வாழ்கையின் இயல்புநிலைக்கு சற்றும் விலகாத மக்கள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் திரையில் நடமாடுகிறார்கள்.

மகனென உறவு கொண்டாடும் சிறுவனை மிரட்ட வேண்டி தன் போலிஸ் நண்பனை அழைத்து வருகிறார் மோகன்லால். அந்நண்பனும் அச்சிறுவனை மிரட்ட வேண்டி போலிஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து செல்ல முற்படுகையில் மோகன்லாலின் அம்மாவக வரும் செம்மின் ஷீலா அப்போலிஸ்கார நண்பனுக்கு கொடுக்கும் ஒரு அடி யாதர்த்தத்தின் ஒரு துளி.

படத்தை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். நான் எப்படியும் இன்னும் ஒரு பத்து முறையாவது பார்ப்பேன் என்று நினைக்கிறேன். நேரம் கிடைத்தால் பாருங்கள்.


இராமசாமி கண்ணன்.

பிரபலமான இடுகைகள்